×

இரட்டைத்திரி போட்டுத்தான் விளக்கேற்ற வேண்டுமா?

பண்பாடும், கலாசாரமும் நவீன வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையா?
– நாராயணன், கூறைநாடு.

நிச்சயமாக இல்லை. பண்பாடும், கலாசாரமும்தான் ஒரு நாட்டின் அடையாளச் சின்னம். உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் தங்கள் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கட்டிக்காப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. நாகரிக மாற்றம் என்ற பெயரில் என்னதான் மனிதனின் நடை, உடை, பாவனைகள் மாறியிருந்தாலும், அவர்களது அடிப்படை பண்பாடு மாறுவதில்லை. இந்தியர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், இருகரம் கூப்பி வணங்குவதை தங்கள் பண்பாடு எனக் கருதுகிறார்கள். நவீனமயமான வாழ்க்கையை பண்பாடும், கலாசாரமும் எந்தவிதத்திலும் பாதிக்காது. மாறாக, அவை இரண்டும்தான் நவீன வாழ்க்கைக்கு ஆணிவேர் என்றால் அது மிகையில்லை.

ஆலயத்தில் உள்ள தூண்களில் ஒரு வித்தியாசமான மிருகத்தின் சிலை தென்படுகிறதே, அந்த மிருகம் உண்மையில் வாழ்ந்த உயிரினமா அல்லது கற்பனையா?
– திருமலைகுமரன், ஈரோடு.

`யாளி’ என்பது அந்த மிருகத்தின் பெயர். யானை மற்றும் சிங்கத்தின் இணைவாக அந்த மிருக உருவத்தைச் செதுக்கியிருப்பார்கள். இந்த மிருகம் டைனோசரைப் போன்று ஒரு காலத்தில் வாழ்ந்ததாகவும், தற்போது அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அது ஒரு கொடூரமான விலங்கு என்றும், அது ஈன்ற குட்டியின் முதல் வேட்டையே யானைதான் என்றும் வரலாற்று நாவல் ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். என்றாலும், அதுபோன்ற ஒரு மிருகம் உயிருடன் இருந்ததாக இதுவரை எந்தவிதமான நேரடிச் சான்றும் கிடைக்கவில்லை. பாலையும், தண்ணீரையும் பிரித்தறியும் அன்னப் பறவை ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு பறவை என்று சொல்வதைப் போல, யாளி என்ற மிருகத்தையும் அவ்வாறே வாழ்ந்ததாக கற்பனையாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், அறிவியல் ரீதியான சான்றுகள் கிடைக்கும்வரை அவற்றை கற்பனை என்ற எல்லைக்குள்தான் வைக்கவேண்டும் என்பது என் கருத்து.

இரட்டைத்திரி போட்டுத்தான் விளக்கேற்ற வேண்டுமா?
– டி.என்.ரங்கநாதன், திருச்சி.

திரி காற்றில் அணையாத அளவிற்கு பருமனாக இருந்தால் ஒற்றைத்திரிகூட போதும். இரட்டைத்திரி போட்டுத்தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்றெல்லாம் விதிமுறை ஏதும் கிடையாது. விளக்கில் ஏற்றப்படும் திரியானது எளிதில் அணைந்துவிடக் கூடாது என்பதற்காக சற்று பருமனாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைதான் இந்த இரட்டைத்திரி.

தியானத்தின் மூலம் முற்பிறவியை காணமுடியுமா?
– விஜய், ஈரோடு.

முடியாது. தியானம் என்பது அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தி செய்யக்கூடிய பயிற்சி. தியானம் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும். ஆத்ம ஞானம் கூடும். முற்பிறவியைக் கண்டறிய மனிதர்கள் யாராலும் இயலாது என்பதே நிதர்சனமான உண்மை.

யாரை நாம் கடவுளாக நினைக்க வேண்டும்?
– என்.மீனா, பெரம்பூர்.

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றெல்லாம் படித்திருக்கிறோமே! பெற்றவர்களையும், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். மாதா, பிதா, குரு இவர்களை நாம் கடவுளாக எண்ணி வணங்கினாலே தெய்வத்தின் அருள் நம்மிடம் வந்து சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தொகுப்பு: அருள்ஜோதி

The post இரட்டைத்திரி போட்டுத்தான் விளக்கேற்ற வேண்டுமா? appeared first on Dinakaran.

Tags : Narayanan ,Korayanadu ,Dinakaran ,
× RELATED அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி...